search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் மா சுப்பிரமணியன்"

    • ஆண்டு ஒன்றுக்கு 30 முதல் 35 உடல்கள் சத்தியமங்கலம் கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
    • 2021-ம் ஆண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மருத்து பெட்டகத்தை பொதுமக்களுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் ஆசனூர் அடுத்த அரேப்பாளையம் மைராடா வளாகத்தில் திராவிட கழகத்தலைவர் கி.வீரமணியின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு பழங்குடி மக்களுக்கான இலவச மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், வீட்டுவசத்தித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெரியார் மருத்துவர் அணி, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் திருச்சி அஸ்வமித்ரா புற்றுநோய் மருத்துவமனை ஆகியவை ஒருங்கிணைந்து கி.வீரமணியின் 92-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாளவாடி ஆசனூர் பகுதியில் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது.

    இப்பகுதியில் 118 கிராமங்கள் உள்ளன. இதில் 47 கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் கடந்த முறை வந்த போது இப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இப்போது அந்த கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக தாளவாடி பகுதியில் அரசு மருத்துவமனையில் ஒரு பிணவறை வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    மலைப்பகுதியில் மாதத்திற்கு 2 அல்லது 3 இறப்பு ஏற்படுகிறது. அந்த உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 30 முதல் 35 உடல்கள் சத்தியமங்கலம் கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    எனவே தாளவாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிணவறை கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இன்று நானும் அமைச்சர் முத்துசாமியும் ஸ்டேஷன் நகரில் ஒரு துணை சுகாதார நிலையம், தாளவாடியில் ஒரு பிணவறை கட்டிடம், உக்கரம் நகரில் ஒரு பொது சுகாதார கட்டிடம், புஞ்சை புளியம்பட்டியில் ஒரு செவிலியர் குடியிருப்பு, நம்பியூரில் ஒரு பொது சுகாதார கட்டிடம், திங்களூரில் ஒரு பொது சுகாதார கட்டிடம், பவானியில் மண் தொழிலாளர் பகுதியில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் என ரூ.3 கோடியே 31 லட்சம் மதிப்பிலான 7 கட்டிடங்களை திறந்து வைத்துள்ளோம்.

    தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 1333 கட்டிடங்கள் புதிய கட்டித் தரப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையை பொறுத்தவரை 8 ஆயிரத்து 713 துணை சுகாதார நிலையங்கள், 2 ஆயிரத்து 286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு அறிக்கை வெயிட்டுள்ளார். அதில் 2023-ம் ஆண்டு தவறான சிகிச்சையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எலி மருந்துக்கு பதிலாக மாற்ற ஊசி போடப்பட்டது என கூறும் அவரிடம் போய் சொல்லுங்கள் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரத்து 317 பேர் இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

    2021-ம் ஆண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மருத்து பெட்டகத்தை பொதுமக்களுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார். இன்றுடன் அந்த திட்டத்தில் 2 கோடி பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். வரும் 29-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2 கோடியாவது பயனாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றி சாதனை படைத்து வருவது மக்களுக்கு புரிகிறது.
    • அரசு ஆஸ்பத்திரிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை, மக்களின் உயிர் காக்கும் துறையா? அல்லது மக்களின் உயிரைப் பறிக்கும் துறையா? என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆட்சி, மருத்துவ துறையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றி சாதனை படைத்து வருவது மக்களுக்கு புரிகிறது.

    சிலருக்கு புரிய வேண்டும் என்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை சாதனை பட்டியலை மீண்டும் நினைவு கூர்கிறேன். மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48, கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம், இதயம் காப்போம் திட்டம், சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம், பாதம் பாதுகாப்போம் திட்டம், தொழிலாளர் தேடி மருத்துவம், மக்களைத்தேடி ஆய்வக திட்டம், நடப்போம் நலம் பெறுவோம் திட்டம், கண்ணொளி காப்போம் திட்டம்.

    மேலும், மருத்துவ கட்டமைப்புகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ பணி நியமனங்கள் என்று சொன்னால் பட்டியல் நீளும். மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பாராட்டும், விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது உலக அளவில் உச்சபட்ச அங்கீகாரம் என்பதை எடப்பாடி பழனிசாமி அறிந்திருப்பாரா? அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மக்கள் இன்னல்களை பட்டியலிட்டால் ஆயிரம் பக்கம் கொண்ட தனிப் புத்தகமே போடலாம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மருத்துவத்துறை சேவை, தரம் உயர்ந்துள்ளது என்பதற்கு மத்திய அரசு வாரி வழங்கி உள்ள விருதுகளே சாட்சி. தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இதுவரை பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 614, இதில், தி.மு.க. ஆட்சியில் பொறுப்பேற்ற பிறகு பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 545.

    அதேபோல் மகப்பேறு துறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்ட சான்றிதழ். இதில், தமிழகம் இதுவரை பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 84, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 55. இவைதான், மக்கள் விரோத ஆட்சிக்கும், மக்கள் நலன் விரும்பும் ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு.

    தற்போது, அரசு ஆஸ்பத்திரிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அரசியலுக்காக ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர்காய நினைக்காதீர்கள். எதிர்க்கட்சி தலைவர் என்பதை உணராமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியை மட்டுமே மனதில் கொண்டு அறிக்கை வெளியிடுவதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி, எரிச்சல்சாமியாக மக்களுக்கு காட்சியளிக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூடிய விரைவில் மேலும் 10 மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட உள்ளன.
    • மிகப்பெரிய நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் இந்த தேர்வுகள் நடைபெறும்.

    நெல்லை:

    தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடங்களை இன்று திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்திலேயே முதல் முறையாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவிகள், பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் 'பிங்க் சோன்' எனப்படும் 5 தனி ஓய்வறைகள் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

    நெல்லையில் சுமார் ரூ. 72 கோடி மதிப்பீட்டில் 450 படுக்கை வசதிகள், 10 ஆபரேஷன் தியேட்டர்கள் கட்டும் பணிகள் வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற நல்வாழ்வு மையம் என்ற 22 புதிய மருத்துவமனைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் மற்றும் உதவியாளர் என 4 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    இதில் முதலமைச்சரால் 12 மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மேலும் 10 மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட உள்ளன.

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,353 மருத்துவ பணியிடங்கள் மற்றும் 2026-ம் ஆண்டு வரை தேவைப்படும் மருத்துவர்கள் பணியிடங்கள் என 2,553 காலி பணியிடங்களுக்கு 24 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

    அதற்கான தேர்வுகள் வருகிற ஜனவரி 27-ந்தேதி நடைபெற உள்ளது. மிகப்பெரிய நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் இந்த தேர்வுகள் நடைபெறும்.

    மேலும் கிராமப்புற செவிலியர் பணியிடங்கள் 2,250 நிரப்பப்படும். இது சம்பந்தமாக 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்கொலைகளை தடுப்பதற்காக ஏற்கனவே சில மருந்துகளை அரசு தடை செய்துள்ளது.
    • இந்த சம்பவத்திலும் குறிப்பிட்ட எலி மருந்து தடை செய்யப்பட்டதாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னையை அடுத்த குன்றத்தூர் மணஞ்சேரி தேவேந்திரன் நகர் பகுதியில் எலி மருந்தில் இருந்து வெளியேறிய கடுமையான நெடி காரணமாக 2 குழந்தைகள் உயிரிழந்தன. இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தற்கொலைகளை தடுப்பதற்காக ஏற்கனவே சில மருந்துகளை அரசு தடை செய்துள்ளது. இந்த சம்பவத்திலும் குறிப்பிட்ட எலி மருந்து தடை செய்யப்பட்டதாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • வேலைநிறுத்தம் அறிவித்துள்ள மருத்துவர்கள் 13 கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

    சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    வேலைநிறுத்தம் அறிவித்துள்ள மருத்துவர்கள் 13 கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

    * அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், உடன் வருவோரை முழுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும்.

    * குறிப்பிட்ட நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை தருமாறு சிபாரிசு செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.

    * அரசு மருத்துவமனைகளில் சிசிடிவியுடன் கூடிய 2 கட்ட பாதுகாப்பு தரப்பட வேண்டும்.

    * அரசு மருத்துவமனைகளின் வெளி நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து இடங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும்.

    * பணியில் இருக்கும் மருத்துவ அதிகாரி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்.

    * அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வரை புதிய அரசு மருத்துவமனைகள் திறக்கப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அரசு மருத்துவ சங்கத்தினருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    • நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை பல்லடம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்குமாறும், அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளும் படியும் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதையடுத்து, கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அப்போது மேஜையில் தமிழக வெற்றிக்கழகத்தின் வண்ணத்திலான போர்வை போர்த்தப்பட்டு இருந்தது.

    இதனை அடுத்து அப்போர்வை அகற்றப்பட்டு மாற்று போர்வை மேஜை மீது போர்த்தப்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

    • நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
    • நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்குமாறும், அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளும் படியும் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு பல்லடம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை பல்லடம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    பின்னர் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்குமாறும், அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளும் படியும் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். 

    • தற்போது தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டு அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
    • தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் நிவேதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையை சேர்ந்த 'யூ டியூபர்' இர்பான்-ஆசிபா தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை இர்பான் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

    இது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என டாக்டர்கள் கண்டனம் தெரிவித்தனர். கடந்த ஆண்டு, தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை துபாயில் பரிசோதித்து அது தொடர்பான வீடியோவை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தற்போது தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டு அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    இதுகுறித்து மருத்துவ ஊரகப் பணிகள் நலத்துறை இயக்குனர் டாக்டர் ராஜ மூர்த்தி கூறியதாவது:-

    குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டும் வீடியோவை, இர்பான் வெளியிட்டு உள்ள நிலையில் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். பிரசவத்தின் போது வீடியோ எடுக்கவும், தொப்புள் கொடியை வெட்டவும், பணியில் இருந்த டாக்டர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்பது குறித்தும் விளக்கம் கேட்கப்படும்.

    பிரசவத்தை டாக்டர் நிவேதிதா பார்த்ததாக தெரிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்படும். அதே போல் பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வது குறித்து அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதிகாரிகள் அந்த மருத்துவமனையில் ஆய்வு நடத்தி உள்ளனர். சர்ச்சைக்கு காரணமான அந்த வீடியோவை இர்பானே நீக்கிவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே, தனியார் மருத்துவமனை டாக்டரிடம் விரைவில் விசாரணை நடந்த சுகாதாரத் துறை முடிவு செய்து உள்ளது.

    இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அமைச்சர் மேலும் கூறியதாவது:- தொப்புள் கொடி வெட்டிய விவகாரத்தில் இர்பான் மருத்துவ சட்ட விதிகளை மீறியுள்ளார். சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும். தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் நிவேதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

    • டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.
    • கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்புகள் குறைந்து உள்ளன.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை தொழிலாளர் காலனியில் இன்று நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது. தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். வருகிற 15-ந்தேதி தமிழகம் முழுவதும் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    சென்னையில் 100 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் 900 இடங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட மக்களை தேடி மருத்துவ முகாம் திட்டம் 1 கோடி பேரை சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் 2 கோடி பேர் வரையில் பயனடைந்துள்ளனர். இதுவரை 1 கோடியே 96 லட்சத்து 77,577 பேர் பயன் அடைந்திருக்கிறார்கள். இதன் மூலம் ஐ.நா.சபையின் பாராட்டையும் பெற்றுள்ளோம். டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

    2012-ம் ஆண்டு 66 பேரும், 2013-ல் 65 பேரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்புகள் குறைந்து உள்ளன. இந்த ஆண்டு இதுவரையில் 7 பேர் மட்டுமே பலியாகி இருக்கிறார்கள்.

    தங்களது வீடுகளின் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் மக்கள் பார்த்துக்கொண்டாலே கொசு உற்பத்தி தடுக்கப்பட்டு விடும். எனவே பொதுமக்கள் இதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 1998 உறுப்புக் கொடையாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
    • தற்போது 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடி மருந்துகளும், நாய்க்கடி மருந்துகளும் கையிருப்பில் உள்ளது.

    சென்னை:

    சென்னை, கலைவாணர் அரங்கத்தில் உறுப்பு தான தின நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று, உடல் உறுப்பு மாற்று விழிப்புணர்வு கையேடு மற்றும் ''மறுபிறவி'' என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு குறுந்தகட்டினை வெளியிட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில், உறுப்பு கொடையாளர் குடும்பத்தினருக்கு சிறப்பு செய்து, உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உறுப்பு மாற்று சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 1998 உறுப்புக் கொடையாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு கொடையாளர்களின் மூலம் பெறப்பட்ட இதயம் 892, நுரையீரல் 912, கல்லீரல் 1,794, சிறுநீரகம் 3,544, கணையம் 42, சிறுகுடல் 15, வயிறு 1, கைகள் 7 என 7,207 முக்கிய உறுப்புகள் பயன்பாடு பெற்றிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 2021 முதல் தற்போது வரை 585 பேர் உடலுறுப்பு தானம் செய்திருக்கிறார்கள்.

    சென்னையில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்து உள்ளார்.

    உடலுறுப்பு கொடையாளர்களின் எண்ணிக்கை பெருகிவரும் சூழ்நிலையில் தொடர்ச்சியாக கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது. சிறுநீரகம் வேண்டி காத்திருப்பவர் 7,106 பேர், கல்லீரல் வேண்டி காத்திருப்பவர் எண்ணிக்கை 416 பேர், இதயத்திற்காக 83 பேர், நுரையீரல் வேண்டி காத்திருப்பவர் 54 பேர், இதயம் மற்றும் நுரையீரல் வேண்டி காத்திருப்பவர் 24 பேர், கணையம், கைகள், சிறுகுடல், வயிறு, சிறுநீரகம், இதயம் என 7,797 பேர் உடலுறுப்பு வேண்டி காத்திருப்பவர்களாக உள்ளனர்.

    இவர்களுக்கு விடியல் என்னும் இணையதளம் தொடங்கி அதன்மூலம் ஒவ்வொருவருக்கும் அவர்கள் பதிவு செய்திருக்கும் காலத்தினை பொறுத்து, உடலுறுப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடி மருந்துகளும், நாய்க்கடி மருந்துகளும் கையிருப்பில் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கையிருப்பு இருந்ததா? என்பதை எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொண்டு பேச வேண்டும். டெங்கு என்பது பெரிய அளவில் கட்டுக்குள் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குரங்கம்மை தொடர்பாக விமான பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட உள்ளது.
    • அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை.

    கோவை:

    கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.

    விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஐரோப்பியாவில் கண்டறியப்பட்ட குரங்கம்மையானது தற்போது உலகம் முழுவதும் 121 நாடுகளில் பரவியுள்ளது. இதையடுத்து உலகில் குரங்கம்மை என்ற நோய் பரவி வருவதால் அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார இயக்குனர் கேட்டுக்கொண்டார்.

    அதன் அடிப்படையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் குரங்கம்மை தொடர்பான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

    மேலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் தனி வார்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    குரங்கம்மை பாதிப்பு யாருக்காவது கண்டறியப்பட்டால் அவர்கள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் காய்ச்சல் பரிசோதனையும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக காய்ச்சல் கண்டறியும் கருவியும் வைக்கப்பட்டுள்ளது.

    குரங்கம்மை தொடர்பாக விமான பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட உள்ளது.

    இதுமட்டுமின்றி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 அரசு ஆஸ்பத்திரிகளிலும் தலா 10 படுக்கை வசதிகளுடன் பிரத்யேக வார்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் இந்த பாதிப்பு கண்டறியப்படவில்லை.

    தமிழகத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் முதல்வன் மருந்தகம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.

    அதன்படி வருகிற பொங்கல் பண்டிகை முதல் தமிழகத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் 1000 முதல்வன் மருந்தகம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும். இதன் மூலம் மக்கள் பயன் அடைவார்கள்.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பாதுகாப்பு வசதி சிறப்பாக உள்ளது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடகிழக்கு பருவமழை நோய் பாதிப்பை கண்காணிக்க 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • ஒரு தெருவிலோ, சிற்றூரிலோ 3 நபர்களுக்கும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவக் குழுக்களை அனுப்பி, பரிசோதனை நடைபெறும்.

    சென்னை:

    தியாகராய நகரில் மழைக்கால நோய் தடுப்பு மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மழைக்கால நோய் பாதுகாப்புகள் கட்டுக்குள் இருக்கிறது. 2017-ல் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் இருந்தது. 65 பேர் உயிரிழந்தனர்.

    தற்போது சென்னை, கோவை, திருப்பத்தூர், தேனி, தஞ்சை, நெல்லை, நாமக்கல், கிருஷ்ணகிரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் டெங்கு அதிகரிக்க தொடங்கி உள்ளன. அதே போல் உன்னி காய்ச்சல் கடலூர், சென்னை, தஞ்சை மாவட்டங்களிலும், எலி காய்ச்சல் சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும், மஞ்சள் காமாலை சென்னை, திருச்சி, தேனியிலும் கண்டறியப்பட்டுள்ளன.

    கடந்த ஜனவரி 1 முதல் நேற்று வரை தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் 6,566 பேர், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்-390 பேர், புளுயன்சா காய்ச்சல்-56 பேர், எலி காய்ச்சல்-1481 பேர், உன்னி காய்ச்சல்-2,639 பேர், வெறி நாய்கடி-22 பேர், மஞ்சள் காமாலை பாதிப்பு-17,500 பேர்.

    இதில் டெங்கு பாதித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் உரிய நேரத்தில் டாக்டர்களை அணுகாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகுங்கள்.

    வரும் மாதங்களில் வடகிழக்கு பருவமழை நோய் பாதிப்பை கண்காணிக்க 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஒரு தெருவிலோ, சிற்றூரிலோ 3 நபர்களுக்கும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவக் குழுக்களை அனுப்பி, பரிசோதனை நடைபெறும்.

    அப்போது வீடு தோறும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள 2992 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்து தினமும் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்து வருபவர்கள் பற்றிய தகவலை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.

    கேரளாவில் பரவி வரும் நிபா வைரசை தடுக்க எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ., மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×